பறம்புமலை:
கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடைய இம்மலை, சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநலக்குன்றம் எனவும் இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.
"ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.
பறம்பு மலையின் வளம்:
(அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து
மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே)
விளக்கம்:
பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது.
பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும்,
உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன.
ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டு,
இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும்.
மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும்.
நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து,
கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும்.
பாரியின் பறம்பு மலை அகல, நீள, உயரத்தில் வானத்தைப் போன்றது.
அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன.
அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும்,
இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும் உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது.
நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டன்.
அதை அடையும் வழியை நான் அறிவேன். தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும்
முறுக்கப் பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி,
மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால்,
பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான். என மேற்கண்ட புறநானூற்று பாடல் ஒன்றில் கபிலர், பறம்புமலைத் தலைவன் பாரியையும், அவனுக்குரிய பறம்புமலையை பற்றியும் புகழ்ந்து பாடுகிறார். இன்று அம்மலையில் குவாரிகள் வந்துவிட்டது.
Comments
Post a Comment