பழிவாங்குதல் ஒரு சுகானுபவம்:
பலஇனக்குழுக்களால் உருவான நம் தமிழினத்தில் கோசர்கள் என்ற ஓர் மரபினரும் உளர்.
அகுதி, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலியோர் கோசர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். முதுகோசர், இளம் கோசர், நான்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர், செம்மற் கோசர்,நீள்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் என கோசர்கள் புலவர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களின் பூர்வீகம் துளு மற்றும் கொங்குதேசம் என கருதப்படுகிறது! நியமத்தில் சிலர் இருந்ததும் தெரியவருகிறது.
கோசர்களின் வஞ்சினம்:
சங்கபாடல் வாயிலாக நன்னன் என்ற பெயரில் பல வேளிர் இருந்ததை அறியலாம். அதில் கொங்கு பகுதியையாண்ட நன்னன் என்ற ஒருவன் இருந்துள்ளான். அக்காலத்தில் தம் வீரத்திற்கு அடையாளமாகவும், பகை மன்னர்களிடம் மானம் பாராட்டவும் அடையாளமாய் காவல்மரத்தை(ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு மரம்) போற்றி பாதுகாத்துவந்துள்ளனர்.
இதில் நன்னனின் காவல்மரமான மாமரத்திலிருந்து கோசர்குடியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருத்தி தன் மசக்கை ஆசையால் நன்னனின் காவல்மரத்திலிருந்த மாங்கனியை தின்ன, பெருங்கோவம் அடைகிறான் நன்னன், இத்துணைக்கும் கோசரும், நன்னரும் பகைகுடியினர் அல்ல. தன் காவல்மரத்தில் கைவைத்தது நன்னனுக்கு மானப்பிரச்சினை ஆகிறது. அவள் கர்ப்பிணி என்பதையும் அவன் மனம் நினைக்கவில்லை,
கோசர்கள் ஒன்றுகூடி அப்பெண்ணின் தவறுக்கு ஈடாய் 99 யானைகள், அவள் எடைக்குஎடை பொன் தருவதாய் கூறி மன்னிப்பு கேட்டும், நன்னன் அப்பெண்ணை இரக்கமில்லாது கொள்கிறான்.
இந்நிகழ்வை குறுந்தொகை பாடல் 292ல் பரணர் ஆவணப்படுத்தியுள்ளார்.
"மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
பனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பிற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய்பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை பரிந்த நன்னன் போல
வரையா நிலத்துச் செலீஇயரோ அன்னை!
ஒருநாள் நகை முக விருந்தினன் வந்தென
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே"
இப்பாடல் வழியே நன்னனை "பெண்கொலை புரிந்த நன்னன்" என நன்னனை வசைபாடியுமுள்ளார் பரணர்.
தன் இனப் பெண்ணைக் கொலை புரிந்ததற்காக நன்னனைப் பழிவாங்க ஒரு சூழ்ச்சியைச்செய்தனர் கோசர்கள். சில பாடல் மகளிரை அஃதை என்ற மன்னனிடம் அனுப்பகின்றனர். அவர்களுக்கு அம்மன்னன் நிறைய யானைகளையும் பரிசுப் பொருள்களையும் தருகின்றான். அவ்வாறு புறப்பட்ட யானைகளைக் கோசர்கள் நன்னனின் காவல் மரமான மாமரத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். இவ்யானைகள் அந்த மாமரத்தை வேரொடு சாய்த்து விடுகின்றன. இதனால் கோபமுற்ற நன்னன் உடனே கோசர் மீது போர் தொடுக்க, அப்போரில் நன்னன் உயிர் விடுகின்றான்.
கோசர் சூழ்ச்சி செய்து நன்னனை கொன்றதை குறுந்தொகை 73 ல் பரணர் குறிப்பிடுகிறார்.
"மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே"
கோசர்கள் சொன்ன சொல்லை மீறாதவர்கள், தம் இனப்பெண்ணை கொன்ற நன்னனை, கோசர்கள் சூழ்ச்சி செய்து வஞ்சினத்தை நிறைவேற்றுவதைப் போல், தலைவனை இனி சந்திக்க முடியாது என்று கூறி, உறுதியுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றினால், தலைவன் திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளைச் செய்வான் என்று தோழி தலைவியிடம் தெரிவிப்பதாய் இப்பாடல் உள்ளது.
Comments
Post a Comment