சைவ ஸ்பெஷல்
- Get link
- X
- Other Apps
சைவ ஸ்பெஷல்:
அம்புளி சோறு:
குழைய குழைய வேகவைத்த அரிசியுடன், வேளைப்பூவை போல தோற்றமளிக்கும் வெண்மையான கெட்டித்தயிர் கலந்து, கூழ்மாதிரி அரைத்து உண்ணும் உணவை, அக்காலத்தில் "அம்புளி சோறு" என அழைத்தனர். அதற்கு வெஞ்சனமாய்(Side dish) வேளைக்கீரையை கூட்டு வைத்து உண்டனர்.இதனை,
"கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை"
எனும் புறநானூற்றின் பாடல் ஒன்றின் வாயிலாய் அறிய முடிகிறது. இதனை சங்ககால சோழனான கோப்பெருஞ்சோழன் தன் நண்பனான பிசிராந்தையார் பற்றி பாடும்பொழுது அவர் இருப்பிடமான பொதிகைமலையில் வாழ்ந்த மக்களின் உணவாக "அம்புளி சோறு" பற்றி சிலாகித்து பாடுகிறார்.
பாலுடை அடிசில்:
அரிசியை தண்ணீரில் கலந்து தண்ணீரில் வேகவைத்து வடிப்பதுபோல், அக்கால தமிழர்கள் பாலினை கொதிக்க வைத்து, அதனுள் அரிசியினை களைந்து, வேகவைத்து அதனை வடித்து உண்டுள்னர். இதற்கு "பாலுடை அடிசில்" எனப்பெயர். திருமணம் முடிந்து வந்த புதுமகள், தான் புகுந்த வீட்டில் இச்சோற்றினை வடித்ததாக அகநானூறு கூறுகிறது.
"விழவுடன் அயர வருகதில் அம்ம
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇக்
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதிடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு"
மேற்கண்ட பாடல் வாயிலாய் இவற்றை அறியலாம்.
குப்பைகீரை கடைசல்:
வறுமையில் வாடிய அக்கால மக்கள், குப்பையில் விளையும் கீரையினை பறித்து, அதனை உப்பில்லாத உலையில் இட்டு (அக்காலத்தில் உப்பும் நெல்லும் சமவிலையில் இருந்தது) அதனுடன் அரிசியை வேகவைத்து கீரைசாதமாய் உண்டனர். மன்னன் குமணனின் நாட்டிலிருந்த வறுமையில் உழன்ற புலவரின் குடும்ப சூழ்நிலையை இப்பாடல் காட்டுகிறது. புறநானூற்றின் பிற பாடல்களில் கீரைச்சோறு பற்றிய குறிப்புகளும் உண்டு.
அவல் கரும்புசோறு-பால் கலவை:
வயலில் முற்றிய கணுவுடைய கரும்பினை தேர்ந்தெடுத்து, அதனை பிழிந்து, பாகுவாக காய்த்து அந்த பதத்தில் பால் கலந்து, அதனுடன் செம்மையான நெல்லினை இடித்து தயாரித்த அவலினை கலந்து, கரும்பு பாகுடன் ஊரவைத்த இனிப்பினை சுற்றத்தாருக்கு உண்ண கொடுத்துள்ளனர். அகநானூற்றின் 217 ம் பாடல் இதனை கூறுகிறது.
மேலும் பல சங்ககால உணவுகளை வரும் நாட்களில் காண்போம்.
- Get link
- X
- Other Apps
Comments
வறுமையால் குப்பைப்கீரை உண்டனர் என்று கூற இயலுமா? அந்தக்கால வறுமை பற்றி வேறு குறிப்புகள் உண்டா. நாரை விடு தூது ஒரு எடுத்துக்காட்டு
ReplyDelete