புறநானூற்றில் பேய்

புள்ளின நிமித்தங்கள்:
நம் சங்கஇலக்கிய நூல்கள் வாயிலாய் பண்டைய தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த சில விஷயங்களை அறியமுடிகிறது. அதில் ஒன்றுதான் நிமித்தம்(சகுனம்) பார்ப்பது, அப்பழக்கம் இன்றுவரை தொடர்ந்து வருவதை அறியலாம். பின்வரும் தீதினை அரசுக்கு முன்னரே தெரிவிக்கும் "நிமித்தகர்" அரசவையில் கூட உண்டு. அத்தகைய நிமித்தங்களில் "புள்" நிமித்தமும் ஒன்று. புள்ளினம் என்றால் பறவையினம் என்கிறது தொல்காப்பியம்.
"பொன் உலகு ஆளீரோ?புவனி முழுது ஆளீரோ?நல் நலப் புள்ளினங்காள்"
என்ற ஆழ்வார் பாசுரம் வாயிலாகவும் புள்ளினங்கள் குறித்து அறியலாம். சங்கஇலக்கியத்தால் புள்நிமித்தம் குறித்து நிறைய தரவுகள் கிடைக்கிறது. சோழன் நலங்கிள்ளியின் வீரர்கள் பறவைகளின் சகுனம் தீயதாய் இருப்பினும், யாம் போருக்கு செல்வோம் என்கின்றனர். இதன்வாயிலாய் போருக்கு செல்லும் முன் புள்சகுனம் பார்த்ததை அறியலாம். இதுபோன்ற நிறைய உதாரணங்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற பிற்கால ஜோதிடநூல் கூட நம்மிடையே வழக்கில் இன்றும் உண்டு.
கடையேழு வள்ளலில் ஒருவனான மலையமான் திருமுடிகாரியை புகழும் கபிலர், பறவைசகுனம் தவறாய் இருந்தாலும்,நாட்பலன் தவறாய் இருப்பினும், அல்லது அவனை புகழ்ந்து பாடாமல் இருப்பினும் அவன் பரிசில்களை வாரிவழங்குவான் என்கிறார்.
"நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குந ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
பீடுகெழு மலையற் பாடியோரே".
Comments
Post a Comment